உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று(13.03.2024) ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.67 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.
வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மாதிரி வீடு கட்டப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் தலா ஒரு வீடு என மொத்தம் 2 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்க்க ரூ.2000.00 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு, 2.50 இலட்சம் வீடுகள் பழுது பார்க்கப்படவுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 5 லட்சம் குடும்பங்களுக்கு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.