திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மைதானத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று(09.03.2024) தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இரண்டாவது நாளான(10.03.2024) குழந்தை திருமணம் தடுத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, வரதட்சனை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு, அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராகசுதா இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சிகள், திண்டுக்கல் கலாலாய நாட்டியப்பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமை பெண் திட்டம், மக்களுடன் முதல்வர், பசுமை தமிழகம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு திட்டம், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, பயனடைந்தனர். கண்காட்சி தொடர்ந்து 18.03.2024-ஆம் தேதி வரை தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.