அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் கட்டட வளாகத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகை” பெயர்ப்பலகையினை திறந்து வைத்தார்.

நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிப்பன் கட்டட வளாகத்தில் கட்டப்பட்ட சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் கட்டளை மையத்தினைத் திறந்து வைத்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இக்கட்டடத்திற்கு “முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகை” என பெயரிடப்படும் என அறிவித்திருந்தார்கள். 

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் கட்டளை மையக் கட்டடத்திற்கு பெயர் சூட்டப்பட்ட “முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகை” பெயர்ப்பலகையினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (14.03.2024) திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, இக்கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினைப் பார்வையிட்டார்.
இக்கட்டடம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரிப்பன் கட்டட வளாகத்திற்குள் 4,705 ச.மீ. பரப்பளவில் ரூ.57.76 கோடி மதிப்பில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சீர்மிகு ஆளுமைக் கட்டடத்தில் 24 x 7 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், பேரிடர் மேலாண்மை மையம், தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மற்றும் புவியியல் தகவல் அமைப்புத் துறை (GIS), சிறப்பு திட்டங்கள் துறைக்கான அலுவலகம், கூட்டரங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இக்கட்டடத்தின் வடிவமைப்பு பாரம்பரிய ரிப்பன் கட்டடத்துடன் பொருந்தும் வகையிலும், LEED மற்றும் IGBC அமைப்புகளின் அதிக மதிப்பீடுகளை பெறும் வகையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரிப்பன் கட்டட வளாகத்திற்குள் உள்ள அனைத்து முக்கிய கட்டடங்களையம் இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதையும் (Skywalk) கட்டப்பட்டுள்ளது. இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் (IGBC) இக்கட்டடத்திற்கு 21.11.2023 அன்று இந்திய அளவில் அரசு கட்டடங்களில் அதிக மதிப்பெண் வழங்கி கௌரவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் உடல்நலனைப் பேணும் வகையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.19.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்திலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும், புத்துணர்ச்சியுடன் பணியை மேற்கொள்ள ஏதுவாக உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கு மற்றும் உள்விளையாட்டு (Indoor Games) கட்டமைப்பு சீரமைத்து தரப்படும் என்கிற மாண்புமிகு மேயர் அவர்களின் அறிவிப்பின்படி, ரூ.19.20 இலட்சம் மதிப்பீட்டில் ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள பழைய பொறியியல் அலுவலகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் சுமார் 1000 சதுர அடி பரப்பளவில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பரந்தாமன், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு.ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் திரு.நே.சிற்றரசு (பணிகள்), திரு.க.தனசேகரன் (கணக்கு), டாக்டர் கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), திரு.த.விசுவநாதன் (கல்வி), திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), திரு.தா.இளையஅருணா (நகரமைப்பு), கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., (சுகாதாரம்), திருமதி ஆர்.லலிதா, இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப.,, துணை ஆணையாளர்கள் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., (கல்வி), திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்), திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.எஸ்.மதன்மோகன், திரு.ஏ.வி.ஆறுமுகம், திரு.நேதாஜி யு. கணேசன், திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி, திரு.நொளம்பூர் வே. ராஜன், திரு.வி.இ.மதியழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தலைமைப் பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.