இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் இன்று (13.03.2024) இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ், ரூ.8.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சமுதாயக் கூடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருப்பள்ளித் தெரு, பி.கே. கார்டன் பகுதியில் ரூ.3.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்து, வாட்டர் பேசின் சாலை, கொண்டித்தோப்பில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.
தொடர்ச்சியாக, வார்டு-58க்குட்பட்ட புரசைவாக்கம், டவுட்டன் மேம்பாலம் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ட்ரிங்ஸ் தெருவில் ரூ.6.5 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ.5.97 இலட்சம் மதிப்பில் கேரம்போர்டு விளையாட்டரங்கம், ரூ.11.30 இலட்சம் மதிப்பில் சாலையோரப் பூங்கா மற்றும் நேவல் மருத்துவமனை சாலையிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு ரூ.5.32 இலட்சம் மதிப்பில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணி மற்றும் ராஜா முத்தையா சாலை, கண்ணப்பர் தெருவில் அமைந்துள்ள கட்டடத்தினை ரூ.10.90 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையமாக மேம்படுத்தும் பணி உள்ளிட்ட ரூ.40 இலட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், அண்ணாநகர் மண்டலம், வார்டு-97க்குட்பட்ட ஆதி ஆந்திரா நகர், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் ரூ.50 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்திற்கான பணி, வார்டு-95க்குட்பட்ட திருநகர், 20வது தெருவில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் ரூ.50 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்திற்கான பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெற்றி அழகன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்), திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, நியமனக் குழு உறுப்பினர் திரு.சொ.வேலு, மண்டலக் குழுத் தலைவர்கள் திரு.பி. ஸ்ரீராமுலு, திரு.கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் ஜெயின், திருமதி ஸ்ரீ ராஜேஸ்வரி, திருமதி புனிதவதி எத்திராஜன், திருமதி லதா வாசு, திருமதி சுதா தீனதயாளன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் (பொ) திரு.பாலமுருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.