சென்னை, அக்டோபர் 2022: ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் ஒன்று பயனுள்ள தகவல் தொடர்பாகும். மாணவர்களின் தகவல் திறன் மேம்பாட்டுக்காக கடந்த வாரம், சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியின் ஆங்கிலமொழி மற்றும் மொழியியல் துறையின் பவர் ஸ்பீக் கிளப், “தனிப்பட்ட பிராண்டிங் மற்றும் செல்வாக்கு திறன்கள்” என்ற தலைப்பில் ஒரு பயிற்சி பட்டறையை நடத்தியது.
இந்த பயிற்சி பட்டறையில் அக்வா – உமன்ஸ் லீடர்ஷிப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி சுபா பாண்டியன் மற்றும் இணை நிறுவனர் திருமதி சுனிதா விக்ரம் ஆகியோர் இந்நிகழ்வில் பயிற்சியாளர்களாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். இருவரும் தனிப்பட்ட பிராண்டிங் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது, தனிப்பட்ட பிராண்டிங்கை எவ்வாறு நிரூபிப்பது, மாணவர்களின் தனிப்பட்ட பிராண்டின் தாக்கம் என்ன என்பன போன்றவற்றை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்கள் தங்கள் பணி வாழ்க்கையைத் தொடங்கும் போது சந்தை போட்டியில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள முனைவது ஒரு மிக முக்கியமான விஷயம் எனவும், ஆதலால் அனைத்து மாணவர்களும் கல்லூரி படிப்பின் போதே தங்களது சுய பிராண்டுகளை உருவாக்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
ஒரு தொழில்முனைவோரின் பார்வையில், அனைத்து பரிவர்த்தனைகளும் தகவல் தொடர்புகளின் விளைவாகும். வலுவான தகவல் தொடர்புதிறன்களைக் கொண்டிருப்பது தொழில்முறை முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் பயனளிக்கிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மாணவர்கள் தகவலை மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொள்வதற்காக, நல்ல தகவல் தொடர்பு திறன்களின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பயிற்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தருமான டாக்டர் N. M. வீரைய்யன் அவர்களும் மற்றும் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர். ரம்யா தீபக் அவர்களும் இத்தகைய கற்றல் மற்றும் கற்பித்தல் முயற்சிகளை பெரிதும் ஊக்குவிக்கின்றனர்.