தமிழ்நாடு பதிவுத்துறை தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்கிற அளவிற்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது. அரசுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டி தரும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழிலை முன்னெடுக்கும் தொழில் முனைவோர்கள் ஆகிய நாங்கள் எல்லாம் சாதாரண பதிவாளர்கள் முன் ஏசகக்காரர்கள் போல் நடத்தப்படுகிறோம்.
மக்கள் நலனில் பதிவுத்துறை துளியும் அக்கறை செலுத்துவதில்லை.
மாறாக நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பினை வின்னை முட்டும் அளவிற்கு கண்ணை கட்டும் அளவிற்கு தன் இஷ்டம் போல பதிவுத்துறை நாளும் உயர்த்தி வருகிறது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பன்மடங்கு வழிகாட்டி மதிப்பினை சந்தை மதிப்பை விட கூடுதலாக உயர்த்தி இருக்கிறது. தனது வாழ்நாளில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சொந்த இல்லத்தினை முதன் முதலில் புதிதாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவினை இது களைய வைத்திருக்கிறது.
மேற்படி முரண்பாடு உள்ள வழிகாட்டி மதிப்பினை களைவதற்கு குறைவு முத்திரை தீர்வை பிரிவு 47/ஏ1 என்ற சட்டப்பிரிவு வழி வகுத்திருந்தாலும், இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் மேல் அதிகாரிகளின் உத்தரவு என்ற பெயரில் சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து சர்வாதிகார போக்கினை கையாளுகின்றனர்.
குறிப்பாக சார் பதிவாளர்கள் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அவர்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணத்தில் ஏதாவது குறைகளை கண்டுபிடித்து, சாக்கப்போக்குகளை சொல்லி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்.
மேலும் புதிய வீட்டுமனை பிரிவிற்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணத்தை தாக்கல் செய்தால், அது குறித்து அவர் மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்வதற்கு பெருமளவில் பணம் கேட்கிறார். இது சம்பந்தமாக குழுவாக சார்பதிவாளரை அணுகி நியாயம் கேட்டால், பதிவுத்துறை அமைச்சர் கேட்கின்ற பணத்தை கொடுக்கிறீர்கள் நாங்கள் கேட்கின்ற பணத்தை கொடுக்க மாட்டீர்களா என அதிகார தோரணையில் மிரட்டுகின்றனர்.