தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 21 கிராம மக்களும் திறக்க விரும்புகிறோம் நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 21 கிராம மக்களும் திறக்க விரும்புகிறோம் எனவே
உச்சநீதிமன்ற இடைக்கால வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆணை வழங்க வேண்டும், என்று நூற்றுக்கணக்கான மக்கள் என்று பேரணியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தனர்.

தூத்துக்குடி கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இயங்கி வந்தது நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை இந்த நிறுவனம் பூர்த்தி செய்து வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக இந்தியா காப்பர் இறக்குமதியிலிருந்து விலகி ஏற்றுமதி செய்து வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையின் காரணமாக அந்நிய பொருளாதாரம் ஈட்டப்பட்டு வந்தது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அடைய ஸ்டெர்லைட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆலையை திறக்க பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலையை திறக்க ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதற்கட்டமாக ஆலையிலிருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றவும், ஆலையில் உள்ள பசுமை வளாகத்தை பராமரிக்கவும்,வேறு கழிவுகள் இருந்தால் அகற்றவும் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் இந்த பணிகளை மேற்கொள்ள உடனடியாக அனுமதி மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

இன்று குமாரரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி, சாமிநத்தம், சில்லாநத்தம், ராஜாவின்கோவில், மீளவிட்டான், மடத்தூர், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். கோரம்பள்ளத்திருந்து சேவை சாலை வழியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி
வந்த அவர்களை காவல்துறையினர் ஊர்வலமாக சென்று மனு அளிக்கக் கூடாது என தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஊர்வலத்தில் வந்த ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறுகையில்..

ஸ்டெர்லைட் ஆலையினால் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையானது தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்கியதால் காப்பர் ஏற்றுமதி செய்து வந்த நாடு இப்போது இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் சில போராளிகள் அந்நிய சக்திகளிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு போராட்டம் நடத்திய தான் காரணம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் இந்த நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள். ஸ்டெர்லைட் ஆலை செயல்பாட்டினால் சுற்றியுள்ள எந்த ஒரு கிராமத்திற்கும் பாதிப்பு என்பதை கிடையாது. போராட்டம் நடத்தியவர்கள் தங்களது சுய நலனுக்காகவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறிய அவர்.. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி பணிகளை மேற்கொள்ள அனுமதியை மாவட்ட நிர்வாகமும் மத்திய, மாநில அரசுகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சார்ந்தவரும் ஓட்டப்பிடாரம் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான வழக்கறிஞர் ஜெயம் பெருமாள் கூறுகையில்…
21 கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறினார்.

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சார்ந்த வரும் துளசி சோசியல் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு இயக்குனர் தனலட்சுமி செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில்…
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ஆலையை திறக்க அனுமதியை வழங்க வேண்டும். இந்த அனுமதியை வழங்கினால் முதற்கட்டமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பொதுமக்கள் பயனடைவார்கள்,

எனவே தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள 21 கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு சில பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வலியுறுத்தி மனுஅளித்தனர்.