தமிழ்நாடு முதலமைச்சர் (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடம் உட்பட ரூ.122.44 கோடி மதிப்பீட்டில் 86 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.22.42 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 3,156 பயனாளிகளுக்கு ரூ.25.83 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தரம் உயர்த்தப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, கட்டிடத்தினை பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது, ரூ.67.02 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு, சீமாங் பிரிவு போன்ற உயர் சிறப்பு கிச்சை அளிக்க 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகள் அடங்கிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்மருத்துவமனைக்கென புதியதாக 124 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடமானது 232602 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையானது, கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தரை தளத்தில் அவசர சிகிச்சை ஃ அவசர சிகிச்சை உள்நோயாளிகள் பகுதி ஃ மகப்பேறு அவசர சிகிச்சை ஃ நுண்கதிர் பகுதி, முதல் தளத்தில் மகப்பேறு பகுதி, இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பகுதி, மூன்றாம் தளத்தில் மகப்பேறு அறுவை அரங்கம் ஃ அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பகுதி, நான்காம் தளத்தில் இருதய சிகிச்சை மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை பகுதி, ஐந்தாம் தளத்தில் புற்றுநோய் சிகிச்சை ஃ காப்பீட்டு சிகிச்சை பகுதி, ஆறாம் தளத்தில் எலும்பு மருத்துவம் ஃ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஃ கட்டண சிகிச்சை பகுதியும், ஏழாம் தளத்தில் சிறுநீரகவியல் ஃ நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதி ஃ கட்டண சிகிச்சை பகுதி மற்றும் எட்டாம் தளத்தில் அறுவை அரங்குகள் ஃ கருத்தரங்க கூடம் உள்ளிட்ட பிரிவுகளுடன் செயல்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி இஆப., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வள்ளி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.அம்பிகா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.டி.கவிதா, மாநகராட்சி பொறியாளர் திரு.விஜயகுமார், 2-ம் மண்டலகுழு தலைவர் திரு.சுப்பிரமணியன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.