பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் (08.03.2024) நடைபெற்றது.
இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்கள் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, மகளிர் அலுவலர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப்போட்டி, பாசிங் பால் (Passing Ball) மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு (Fashion Show) உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மகளிருக்கு கேடயத்தினையும் மாண்புமிகு மேயர் அவர்கள் வழங்கினார்.
பெண்கள் ஒவ்வொரு நாளும் தனது குடும்பத்திற்காகவும், தனது சமுதாயத்திற்காகவும் பாடுபடுகின்ற காரணத்தினால் நிச்சயம் எப்பொழுதும் கொண்டாடப்பட வேண்டும். தற்பொழுது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றனர். அனைத்து வேலைகளையும் திறமையாக செய்யக் கூடியவர்கள் பெண்கள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய உடல் நலத்திற்காகவும், மனநலத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
பெண்கள் தினம் என்பதை தாண்டி, நம் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளிடம் பெண் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை குழந்தைப் பருவம் முதலே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்பொழுது தான் பிற்காலத்தில் அந்த ஆண் குழந்தை சமுதாயத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், மரியாதை தர வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் மகளிர் அலுவலர்கள், பணியாளர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., (சுகாதாரம்), திருமதி ஆர். லலிதா, இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), துணை ஆணையாளர்கள் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.