மக்களவைத் தேர்தல் – 2024 தொடர்பானஅனைத்து மத்திய தேர்தல் பார்வையாளர்களுடனான விளக்கக் கூட்டம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் மக்களவைத் தேர்தல் - 2024 சிறப்பான முறையில் நடத்திட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும், தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  2024 மக்களவைத் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றிட ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.  

மக்களவைத் தேர்தல் - 2024 தொடர்பான மத்திய தேர்தல் பார்வையாளர்களுடனான தேர்தல் நடைமுறை விளக்கக் கூட்டம் மாண்புமிகு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ்குமார் தலைமையில் புதுடெல்லி விக்ஞான் பவனில் (11.03.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துதல், தேர்தல் விதிமுறைகள் செயல்படுத்துதல், தேர்தல் செலவினங்கள் போன்ற தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து மாநிலங்களைச் சார்ந்த மத்திய தேர்தல் பார்வையாளர்களுடன் காணொளி மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற காணொளிக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல்  அதிகாரி திரு. சத்ய பிரத சாகு இ.ஆ.ப., கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப., இணை தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. ஶ்ரீகாந்த் இ.ஆ.ப., இந்திய குடிமைப்பணி, இந்திய காவல்பணி மற்றும் இந்திய வருவாய் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.