முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (14.03.2024) ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து, 156 பயனாளிகளுக்கு ரூ.38.67 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சியினால் நாள்;தோறும் பல்வேறு திட்டங்கள் துவக்கப்படுகிறது. பல்வேறு முடிவுற்ற திட்டங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று நாள்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் (14.03.2024) 156 பயனாளிகளுக்கு ரூ.38.67 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2,000ஃ- தொடர்ச்சியாக பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 78 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். அந்த வகையில், சோலார் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 60.00 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் சத்தி சாலையில் 13.50 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை நமது மாவட்டத்திற்கு வழங்கினார்கள். மேலும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 08.02.2024 அன்று சுமார் 13,500 நபர்களுக்கு ஒரே மேடையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (13.03.2024) கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுகான அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு ஏறத்தாழ ரூ.122.44 கோடி மதிப்பீட்டில் 86 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.22.42 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 3,156 பயனாளிகளுக்கு ரூ.25.83 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். மேலும் சோலார் பகுதியில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் காய்கறி மளிகை சந்தை வளாகம், வ.உ.சி பூங்காவில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.30.00 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்துதல், புதிய மாவட்ட மைய நூலகம் அமைத்தல் உள்ளிட்ட சுமார் ரூ.106.00 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார்கள்.
மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமை தொகைத் திட்டம், பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடந்த 08.03.2024 அன்று வெண்கலப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சிகளை பார்வையிட்டார்.
முன்னதாக, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இசைப்பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 28 நபர்களுக்கு ரூ.26,88,308ஃ- மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர், 10 நபர்களுக்கு ரூ.10,60,000ஃ- மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு ரூ.45,250ஃ- மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டி, 5 நபர்களுக்கு ரூ.46,750ஃ- மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு ரூ.24,000ஃ- மதிப்பீட்டில் கார்னர் நாற்காலி, 5 நபர்களுக்கு ரூ.3,650ஃ- மதிப்பீட்டில் ஊன்றுகோல், 20 நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் 78 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை என 156 பயனாளிகளுக்கு ரூ.38,67,958ஃ- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், எடை குறைவான 10 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தா.முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டல குழுத்தலைவர் திரு.சசிகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திருமதி.செ.கலைமாமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.